திருமகள் ஸ்ரீவரமங்கையாக இந்த க்ஷேத்திரத்தில் வளர்ந்து திருமாலை மணந்ததால் 'ஸ்ரீவரமங்கை' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள திருக்குளம் முற்காலத்தில் நான்கு ஏரிகளாக வெட்டப்பட்டிருந்ததால் 'நாங்குநேரி' (நான்கு ஏரி) அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சிந்து தேசத்து அரசன் குசாஸன மகரிஷியால் சபிக்கப்பட்டு நாய் உருவமாக மாறினான். இங்குள்ள புஷ்கரணிக்கு வந்து நீராடி தனது சாபம் நீங்கப் பெற்றான்.
உரோமச முனிவர் இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்ததால் 'உரோமச க்ஷேத்திரம்' என்றும், ஆதிசேஷன் இத்தலத்தில் தவம் செய்ததால் 'நாகன் சேரி' என்றும் அழைக்கப்படுவதாகக் கூறுவர். ஊர்வசியும், திலோத்தமையும் இங்கு தவமிருந்து பெருமாளின் இருபுறமும் வெண்சாமரம் வீசும் பாக்கியம் பெற்றதாக ஐதீஹம்.
மூலவர் தோத்தாத்ரிநாதன் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் தெய்வநாயகன். தாயார் சிரீவரமங்கை என்று வணங்கப்படுகின்றார். பிரம்மா, இந்திரன், உரோமச முனிவர், பிருகு முனிவர், மார்க்கண்டேயர் ஆகியோருக்கு பெருமாள் பிரத்யக்ஷம். தானாக தோன்றிய ஸ்தலம்.
பெருமாளுக்கு தினமும் நடைபெறும் தைல அபிஷேக எண்ணெயை அங்குள்ள கிணற்றில் ஊற்றிவிடுவார்கள். இந்த எண்ணெயை நம்பிக்கையுடன் சாப்பிட்டால் எல்லா வியாதிகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள சடாரியில் ஸ்ரீசடகோபன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. வானமாமலை மடத்தின் தலைமை இடம். மணவாள மாமுனிகளின் தங்க மோதிரத்தை வானமாமலை ஜீயர் ஐப்பசி மூல நட்சத்திரத்தன்று சாத்திக் கொள்ளும் வழக்கம் உள்ளது.
நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியள்ளார். காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 9 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.
|